கதைப்பாடல்:   தாமரைப் பூவருகே தவளை...!

ஆழ்வார் திருமலைச் சோலையிலேஅழகிய தாமரைக் குளமுண்டு
கதைப்பாடல்:   தாமரைப் பூவருகே தவளை...!

ஆழ்வார் திருமலைச் சோலையிலே

அழகிய தாமரைக் குளமுண்டு

அந்தத் தாமரைக் குளத்தினிலே

அழகாய்த் தாமரைப் பூப்பூக்கும்!

தாமரைப் பூத்தக் குளத்தினிலே

தவளை ஒன்றும் இருந்ததுவே;

தாமரைப் பூவின் அருகேதான்

தவளை தினமும் நீந்திவரும்!

தாமரைப் பூவின் அருகினிலே

தவளை நீந்திய போதினிலும்;

தாமரைப் பூவில் இருக்கின்ற

தேனைப் பற்றித் தெரியாது!

வனத்தில் எங்கோ சுற்றிவிட்டு

வந்தது தேனீ குளத்துக்கு;

அமர்ந்தது தாமரைப் பூவினிலே

அழகாய்த் தேனினை உறிஞ்சியது!

நித்தமும் தாமரைப் பூவருகே

நீந்திய அந்தத் தவளைக்கோ;

நத்தித் தேனையே அருந்துகிற

நலனை அறியா திருந்ததுவே!

சிறப்பு கொண்ட நல்லோரின்

சீரை அறிந்து எந்நாளும்;

முறையாய்ப் பயனைக் கண்டிடவே

முயற்சி செய்யார் மூடர்களே!

அருகினில் இருந்தும் தேனினையே

அறியா திருந்த தவளையென;

உறவென நல்லோர் நட்பினையே

ஓம்பார் பயனெதும் கொள்ளாரே!

ஒருநாள் கண்டே பழகிடினும்

உத்தம அறிவின் மேலோரை;

திருநாள் போலே நட்பாக்கிச்

சிறக்க முயற்சி கொள்ளணுமே!

அறிவில் சிறந்தோர் நட்பினையே

அற்புதப் புதையலாய்க் கொள்ளணுமே;

பெரிதென நாளும் அதைப்போற்றிப்

பெற்றிட வேண்டும் உறவினையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com